Thursday, May 08, 2008

436. செல்லாது! செல்லாது! - வேணுகோபால் பணி நீக்கம் பற்றி சுப்ரீம் கோர்ட்

வேணுகோபால் நீக்கம் சட்டவிரோதம்-சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
டெல்லி: டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக (எய்ம்ஸ்) இயக்குநர் பதவியிலிருந்து டாக்டர் வேணுகோபாலை நீக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

எய்ம்ஸ் இயக்குநராக இருந்து வந்த டாக்டர் வேணுகோபாலுக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது பெரும் மோதலாக வெடித்தது.

இந்த நிலையில், எய்ம்ஸ் மாணவர்கள், வேணுகோபாலுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். இதற்கு வேணுகோபால்தான் காரணம், அவர்தான் போராட்டத்தைத் தூண்டி விட்டு வருகிறார் என்று அன்புமணி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மேலும், வேணுகோபாலுக்கு எதிராக தீவிர நடவடிக்கையிலும் இறங்கினார் அன்புமணி. அதன் உச்சகட்டமாக நாடாளுமன்றத்தில் வேணுகோபாலை பதவியிலிருந்து நீக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றினர்.

அதன்படி 65 வயதை டாக்டர் வேணுகோபால் தாண்டி விட்டதால், அவர் இயக்குநர் பதவியில் நீடிக்க முடியாது என்று கூறி இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து டாக்டர் வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்று இன்று அதிரடித் தீர்ப்பை அளித்தது.

வேணுகோபால் தாக்கல் செய்த மனுவில், தனது பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை இருப்பதாகவும், இந்த நிலையில் சட்டத் திருத்தம் மூலம் தன்னைப் பதவி நீக்கம் செய்தது செல்லாது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, ஹரிஜித் சிங் பேடி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது, இது சட்டவிரோதமானது. மனுதாரரை மட்டுமே குறி வைத்து இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மிகவும் பாரபட்சமாக, தன்னை குறி வைத்து இந்த நடவடிக்ைக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மனுதாரர் கூறியதை இந்த நீதிமன்றம் ஏற்கிறது.

இந்த வழக்கிலும், எய்ம்ஸ் ஊழியர் சங்கம் தாக்கல் செய்துள்ள இதே வழக்கிலும் இறுதித் தீர்ப்பு வரும் வரை இயக்குநர் பதவிக்கு நிரந்தரமாக யாரையும் மத்திய அரசு நியமிக்கக் கூடாது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து எய்ம்ஸ் இயக்குநராக டாக்டர் வேணுகோபாலை மீண்டும் நியமிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஜூலை மாதம் வரை அவர் தொடர்ந்து பதவி வகிக்கவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வேணுகோபாலை பதவியிலிருந்து நீக்கிய பின்னர் டாக்டர் டோக்ரா இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

நன்றி: thatstamil.oneindia.in


டெயில் பீஸ்:

இத்தீர்ப்பு பாராளுமன்ற முடிவுக்கு எதிரானது போல் தோன்றினாலும், அமைச்சர் அன்புமணி, வேணுகோபாலை விரட்டுவதற்காகவே, இந்த சட்டத் திருத்தத்தை பாராளுமன்றம் முன் வைத்து அது நிறைவேற்றப்பட்டது என்பது தெளிவாகவே தெரிகிறது! வேணுகோபாலோடு முட்டிக் கொள்வதற்கு முன்பாகவே, அமைச்சர் இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வந்திருந்தால், சுப்ரீம் கோர்ட் 'சட்டத் திருத்தம் செல்லாது' என்று கூறியிருக்காது. அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை, தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளுக்கு இடம் தரும் வகையில் பயன்படுத்தக் கூடாது என்பது இத்தீர்ப்பின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வேணுகோபாலின் பதவிக் காலம் இன்னும் 2 மாதங்களில் (ஜூலை 2008) முடிவுக்கு வருகிறது, நல்ல வேளை தீர்ப்பு அதற்கு முன்பே வந்து விட்டது :)

தற்போது அமைச்சர், 'இது மத்திய அரசின் முடிவு, எனது தனிப்பட்ட முடிவு அல்ல, அதனால், இந்த தீர்ப்பு தொடர்பாக தான் பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று கூறியதாக ஒரு செய்தியில் வந்திருக்கிறது. (CNN-IBN).

வேணுகோபால் தொடர்பான எனது முந்தைய பதிவுகள்:
http://balaji_ammu.blogspot.com/2006/07/blog-post_07.html
http://balaji_ammu.blogspot.com/2006/07/blog-post_09.html

எ.அ.பாலா

7 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

Unknown said...

தனியொரு மனிதனுக்காக (ஆதரவாகவோ அல்லது எதிராகவோ), ஒரு நாட்டின் சட்டத்தையையே திருத்தும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் இனியாவது திருந்தினால் சரி.

enRenRum-anbudan.BALA said...

//
தனியொரு மனிதனுக்காக (ஆதரவாகவோ அல்லது எதிராகவோ), ஒரு நாட்டின் சட்டத்தையையே திருத்தும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் இனியாவது திருந்தினால் சரி.

//
வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரி தான் !

dondu(#11168674346665545885) said...

//தற்போது அமைச்சர், 'இது மத்திய அரசின் முடிவு, எனது தனிப்பட்ட முடிவு அல்ல, அதனால், இந்த தீர்ப்பு தொடர்பாக தான் பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று கூறியதாக..//

ஆகா, ஒத்து கொண்டு விட்டோம் அவர் மீசையில் மண் ஒட்டவில்லை என்று.

ராமதாசின் புதல்வர் என்ற ஒரே தகுதியினால், அவர் கட்சியில் அவரை விட தகுதி வாய்ந்தவர்கள் பலர் இருப்பினும், பார்லிமெண்ட் தேர்தலில் கூட நிற்காத நிலையில் வெட்கம் கெட்டு போய் பதவிக்கு வந்தவர் அன்புமணி. சொல்லப்போனால் இவர்தான் அனியாய இட ஒதுக்கீட்டில் வந்தவர்.

இவரெல்லாம் வந்து வேணுகோபால் அவர்களை மட்டம் தட்ட நினைத்தது காலத்தின் கோலமே. அவருக்கு சூடு கொடுத்த சுப்ரீம் கோர்ட் பாராட்டுக்குரியது.

அன்புமணி அவர்கள் இதனால் எல்லாம் ராஜினாமா செய்துவிட மாட்டார் என்பதும் தெரிந்ததே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

PRABHU RAJADURAI said...

"வேணுகோபாலோடு முட்டிக் கொள்வதற்கு முன்பாகவே, அமைச்சர் இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வந்திருந்தால், சுப்ரீம் கோர்ட் 'சட்டத் திருத்தம் செல்லாது' என்று கூறியிருக்காது"

அப்படியொரு காரணத்தை உச்ச நீதிமன்றம் கூறவில்லை. அந்தப் பிரச்னையினை அலசவும் இல்லை. முழுக்க முழுக்க சட்ட பூர்வமாகவே தீர்க்கப்பட்ட பிரச்னை.

சட்ட திருத்தம், உண்மையில் சட்டத்திருத்தம் வரும் நாளில் எம்ஸில் இயக்குஞராக இருப்பவரை மட்டுமே பாதிக்கும் வகையில் இருந்தது. அது வேணுகோபாலைத் தவிர வேறு யாரும் இல்லை. இவ்வாறு தனியொரு நபரை பாதிக்கும் சட்ட திருத்தம் அவரது அடிப்படை உரிமையினை பாதிப்பதாக கூறி சட்ட திருத்தம் செல்லாது என கூறப்பட்டது. இதற்கு முன் தீர்ப்புகள் உள்ளன.

அன்புமணிக்கு யாரோ மோசமான சட்ட ஆலோசனை கூறியுள்ளனர். விரும்பாத வேலையாளை நீக்க பல வழிகள் இருக்க, இந்த வழியினை அவர் தேர்ந்தெடுத்தது...ஏன் என்று புரியவில்லை!

மற்றபடி தெளிவான பதிவிற்கு நன்றி!

enRenRum-anbudan.BALA said...

கருத்துக்கு நன்றி, பிரபு.

நான் சொன்னது யூகத்தின் அடிப்படையில் தான், நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, தனிமனிதரின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையில் இந்த திருத்தம் இருப்பதாகத் தான் நீதிமன்றம் கூறியது.

இந்த விஷயம் குறித்து நீங்கள் விரிவான பதிவொன்று எழுதுவீகள் என்று எதிர்பார்த்தேன், எழுதாததால், என்னைப் போன்றவர்கள் இப்படி தடாலடியாக ஏதாவது சொல்லி வைக்கிறோம் :)))

எ.அ.பாலா

PRABHU RAJADURAI said...

இல்லையில்லை....தாங்கள் கூறியதிலும் உண்மையுள்ளது. வெளிப்படையாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் அதனைக் கூறாவிட்டாலும், பிரச்னை அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்.

on record இல்லை. அவ்வளவுதான்:-)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails